சொல்லிலக்கணம்

ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது சொல் ஆகும். அது,

  • இரு திணைகளையும் ஐந்து பால்களையும் குறிக்கும்.
  • மூவகை இடங்களிலும் வரும்.
  • உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வரும்.
  • வெளிப்படையாகவும் குறிப்பாகவும் விளங்கும்.

மூவகை மொழி

  • தனி மொழி, தொடர்மொழி, பொதுமொழி

[!important]
ஒருமொழி ஒருபொரு ளனவாம் தொடர்மொழி பலபொரு ளனபொது இருமையும் ஏற்பன.(நன்னூல் -260)

  • தனிமொழி - சொல் தனித்து நின்று பொருள் தருமாயின்

    • கண், படி - பகாப்பதம். கண்ணன், படித்தான் - பகுபதம்
  • தொடர் மொழி - இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது

    • கண்ணன் படித்தான்
  • பொது மொழி - ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தருவது.

    • எட்டு - எண் | எள்+து - எள்ளை உண்
    • வேங்கை - மரம் | வேம் + கை - வேகின்ற கை

தொழிற்பெயர்

ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண், இடம். காலம், பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும்.

  • தல்,அல்,கை விகுதி பெற்று வரும்.

விகுதி பெற்ற தொழிற்பெயர்கள்

  • வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர்
  • நடத்தல், ஆளல், வாழ்க்கை

ஒரே வினையடி பல விகுதிகளையும் ஏற்கும்.

  • நட என்பது வினையடி ; நடை, நடத்தல்

எதிர்மறைத் தொழிற்பெயர்
எதிர்மறைப் பொருளில் வருவது

  • நடவாமை. கொல்லாமை

முதனிலைத் தொழிற்பெயர்

  • விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயராதல்
  • தட்டு, உரை, அடி

முதனிலை திரிந்த தொழிற்பெயர்

  • விகுதி பெறாமல் முதனிலை திரிந்து வரும்
  • கேடு, சூடு

வினையாலணையும் பெயர்

  • ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது.
  • அது தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களிலும் மூன்று காலங்களிலும் வரும்.
  • தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிக்கும்
  • வந்தவர் அவர்தான்.
  • பொறுத்தார் பூமியாள்வார்.